தமிழகத்தில் வரும் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை.
ஆனாலும் நூறு சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் வழக்கமான சேவையில் ஈடுபடும் என தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பாட்டு வழிமுறையை வெளியிட்டுள்ளது. தற்போது வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தொற்றால் இறந்துள்ளனர். வங்கிகள் நூறு சதவீத ஊழியர்களுடன் , வழக்கம் போல செயல்பட்டால் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வங்கி வணிக நேரத்தை காலை, 11:00 முதல், பகல் 2:00 மணி வரை குறைக்க வேண்டும். ஐம்பது சதவீத ஊழியர்களை மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும். ஊரடங்கின் போது அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும்.
வங்கி ஊழியர்களுக்காக சிறப்பு பஸ் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.