
தேங்காப்பட்டணத்தில் கடலும், ஆறும் சங்கமிக்கின்ற பொழிமுக பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி 2010-ஆம் ஆண்டு ரூ.40 கோடி திட்ட மதிப்பீட்டல் துவங்கியது.

முதற்கட்டமாக 585 மீட்டர் நீளத்தில் பிரதான அலை தடுப்பு சுவர் மற்றும் 132 மீட்டர் நீளத்தில் துணை அலை தடுப்பு சுவர் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இரண்டு வருட காலத்தில் முடியும் என அறிவிக்கப்பட்ட இதன் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளது. மீன்பிடி தங்குதளம் மற்றும் கட்டிடங்கள் போன்ற பணிகள் தற்போது நடந்து வருகிறது. சாலை வசதிகள் உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் முடிவு பெறாமல் உள்ளது.

இந்த துறைமுக பணிகள் நிறைவடையும் போது, சிறியதும் பெரியதுமாக சுமார் 800 படகுகள் தங்கு தளத்தில் நிறுத்த முடியும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பினை பெறுவார்கள். இந்நிலையில் கடல் சீற்றத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அலை தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன. இதனால் திட்ட மதிப்பீடுகள் மாற்றப்பட்டு தற்போது ரூ.102 கோடியை தொட்டுள்ளது. பிரதான அலை தடுப்பு சுவருக்கும், துணை அலை தடுப்பு சுவருக்கும் இடைபட்ட பகுதிகள் வழியாகத்தான் மீன்பிடி படகுகள் கடலுக்கு உள்ளே செல்லும் நுழைவு வாயில் உள்ளது.

இந்த இடத்தில் குறைந்தது 4 மீட்டர் முதல் 5 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். ஆனால் அலை காரணமாக இந்த நுழைவு வாயில் பகுதியில் மணல் குவியல் ஏற்படுவது தற்போது வழக்கமாகி விட்டது. இந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மணல் குவியலை அகற்ற ரூ. 11 கோடி நிதி முதன் முதலில் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 2 கோடி ஒதுக்கியும் பணி முழுமையடையாத நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் பிரதான அலை தடுப்பு சுவரின் அடிப்பகுதிகளில் அடுக்கப்பட்டுள்ள கற்கள் அலையின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் பெயர்ந்து விழுவதால் சுவரில் ராட்சத ஓட்டைகள் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, நுழைவாயில் குறுகிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் அலையின் சுழற்சி முறையில் மாற்றம் ஏற்படும், கடலுக்கடியில் நீரோட்டத்தின் தன்மை மாறும். அப்போது எழும்பும் அலையில் பைபர் படகின் பின்பக்கம் உயர்ந்த நிலையில், இன்ஜின் புரபெல்லர் (விசிறி) தண்ணீரின் மேல் பகுதியில் நிற்கும், அந்நேரம் படகை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அப்போது அடிக்கிற அலை, படகை நிலை குலைய செய்து துறைமுக முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் கொண்டு போய் மோதுகிறது. அந்நேரம் படகில் இருக்கும் மீனவர் தூக்கி வீசப்பட்டு பலி ஏற்படுகிறது. மீன்பிடித்து விட்டு வரும் விசைப்படகுகள் துறைமுகத்திற்குள் செல்ல வேண்டுமானால், குறைந்தது துறைமுக முகத்துவாரத்தில் 4 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தரை தட்டாமல் விசைப்படகுகள் உள்ளே வரமுடியும்.

அலை அடிக்கும் போது ஜுன், ஜுலை மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் அதிகமான மணலை கரைப்பகுதியில் கொண்டு சேர்க்கும். கடந்த 2018-ஆம் ஆண்டு மீன்துறை இயக்குநர் இந்த துறைமுகத்தை ஆய்வு செய்த போது மணலை அகற்ற நிரந்தரமாக தூர் வாரும் படகை நிறுத்த கூறினோம். எனவே அரசு இந்த துறைமுகத்தில் அலையால் வந்து சேரும் மணலை அகற்ற நிரந்தரமாக தூர்வாரும் படகை நிறுத்தி வைத்து, துறைமுக முகத்துவாரத்தில் சேரும் மணலை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றார்.