
சீனாவுடன் பொருளாதார ரீதியான உறவை முறித்தால் அது சிக்கலாக முடியும், இரண்டு நாட்டின் உறவுமே முக்கியம் என சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா சீனா இடையே லடாக் மோதல் இன்னும் முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. லடாக்கில் இருந்து இன்னும் சீனாவின் படைகள் மொத்தமாக வாபஸ் வாங்கவில்லை. இன்னும் சீனாவின் படைகள் சில இடங்களில் உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் சீனாவிற்கு பொருளாதார ரீதியாக இந்தியா எதிர்ப்பு காட்ட தொடங்கி உள்ளது.

கிட்டத்தட்ட நூறு சீனாவின் செயலிகள் இதுவரை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சீனாவில் இருந்து தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் எல்லாம் இப்போது இந்தியா வர தொடங்கி உள்ளது. சீனாவிற்கு எதிராக பொருளாதார ரீதியாக இந்தியா எடுக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது என்று கூறப்படுகிறது.

இந்தியா மீது இதனால் சீனா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவும் பொருளாதார ரீதியாக சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிடம் தற்போது சீனா வெளிப்படையாக கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிற்கு எப்போதும் சீனா ஒரு எதிரியாக இருந்தது இல்லை.

நாம் இருவரும் நட்பாகவே இருந்து இருக்கிறோம். இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டால் அது பெரிய பிரச்சனையாக மாறும். இந்தியா -சீனா உறவு என்பது ஒன்றாக பிணைந்தது. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது. இரண்டு நாடுகளும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நமது உறவின் நோக்கம். இரண்டு நாட்டின் பொருளாதரமும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறது. இதை முறிக்கும் வகையில் செயல்படகூடாது.

இரண்டு நாட்டின் உறவும் எப்படிப்பட்டது என வரலாற்றை பார்த்தால் தெரியும். இரண்டு நாடுகளும் எப்போதுமே ஒற்றுமையாகவே இருந்துள்ளது. இரண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நமது நட்பு மிகவும் அவசியம். சீனாவுடன் உறவை முறித்தால் சீனா மட்டுமின்று இரண்டு நாடுகளுமே பொருளாதார ரீதியாக தோல்வி அடையும் என்று சீனா தெரிவித்துள்ளது.