
கொரோனா வைரஸ் பரவிய பிறகு சீனா மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் அதிருப்தியில் உள்ளன.

அத்துடன், இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தி, எல்லைப் பிரச்சினையை தூண்டி உள்ளது. இதுபோன்ற சீனாவின் நடவடிக்கையினால் மற்ற நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால் தற்போது, ரஷ்யாவை சீனா உளவு பார்ப்பதாகவும், ரஷ்ய உளவாளிகள் மூலம் ஏராளமான ரகசிய தகவல்களை சீனா பெற்றுள்ளதாகவும் சமீபத்தில் ரஷ்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கு வழங்க இருந்த எஸ்-400 ரக ஏவுகணைகள் டெலிவரியையும் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மீண்டும் அவை எப்போது வழங்கப்படும் என்ற தகவலையும் ரஷ்யா வெளியிடவில்லை. இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான சீனா நடவடிக்கையில் தொய்வை ஏற்படுத்தும். மேலும், இது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகள், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளாக கருதப்படுகிறது. இந்த வகை ஏவுகணைகள் தரையில் இருந்து வானில் வரும் எதிரி இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்க கூடியவை. வானில் 400 கி.மீ தூரத்தில் வரும் எதிரி இலக்கையும் எஸ்-400 ஏவுகணைகள் தாக்கி அழிக்கும். இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து வானில் 30 கி.மீ. உயரம் வரை செல்லும் திறன் படைத்தவையாகும்.

கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி ரஷ்யா சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு துணை பிரதமர் யூரி இவானோவிச் போரிசோவ்வை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு தொடர்ந்து ராணுவ தளவாடங்களை ரஷ்யா வழங்கும் என்று போரிசோவ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.