
கொரோனா வைரஸ் நோய் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 7,500-கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நேரத்தில் 7500க்கும் மேலான மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் பல்வேறு மாணவிகள் வயது 10லிருந்து 15 வயதுக்குள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சென்ற மார்ச் மாதம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. அதன்பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரித்தது அதிகரித்து இருக்கிறது. பலோம்பே நகரில் மட்டும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் 1200 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மிக மோசமாக பாதித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் பாலியல் அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் வயது சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். மாலாவி நாட்டில் இதுவரை 3,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் 150-க்கும் மேலானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதுபோலவே கென்யா நாட்டிலும் ஜூலை தொடக்கத்தில், கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதில் 160,000க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கின் காரணமாக மூன்று மாதங்களில், 150,000க்கும் மேலான கென்ய சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டனர். இது அவர்களின் மாத கருத்தரிக்கும் சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர். கென்யா நாடு உலகின் மிக அதிகமான சிறுமிகள் கர்ப்பமடையும் விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில் 85 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.