
இந்தியாவில் உள்ள ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊடகங்களில் உருக்கமான வீடியோ வெளியிட்டு மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் இரண்டுபேரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் எச் ஒய் சி (HYC) என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக இளைஞர் ஒருவர் பேசியிருந்தார். மேலும், அந்த இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை எடுத்து வருவது போன்ற காட்சிகள் அதில் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய பலமக்கள், வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு நன்கொடை அனுப்பியுள்ளனர். தொழிலதிபர் ஒருவர் 45 லட்சம் ரூபாயை நன்கொடையாக அனுப்பியுள்ளார்.

இது போன்று ஒரு 15 நாட்களில் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை பணம் வசூலை அள்ளிய அந்த கும்பல், தங்களின் நன்கொடை பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என விசாரிக்க சென்றவர்களையும் பலமாக தாக்கியதாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் சல்மான்கான், அகமது மொய்தீன் ரஷித்தை காவல் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.