
காமெடி நடிகர் வடிவேலு சொன்னது போல போற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ காமெடியாக பேசி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.

தமழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவலர்கள், அமைச்சர்கள், எம்.எம்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜூ, தங்கமணி மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னையிலிருந்து மதுரை வந்துள்ளார். அவருக்கு மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாநகர மாவட்ட அலுவலகத்தில் வைத்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கோரிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ போற போக்கில கொரோனா நம்மளையும் டச் பண்ணிட்டு போயிருச்சு என்று வடிவேலு பாணியில் நகைச்சுவையாக கூறினார் உடனே அங்கிருந்த அனைவரும் சிரிப்பில் ஆரவாரித்தனர்.