
கல்லூரி மாணவி ஒருவர் முகம் தெரியாத நபரிடம் பேசி 87 ஆயிரம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை நிகழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த சுரேஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சௌந்தர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் தனது செல்போனுடன் பொழுதை கழித்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஜிபே என்ற இணையதளம் மூலம் தொடர்ச்சியாக குறுந்தகவல் வந்ததாகக் சொல்லப்படுகிறது.

தற்போது அனைவரும் ஜிபே என்ற பணம் பரிவர்த்தனை செய்யும் செயலியை பயன்படுத்தி வருவதால் அந்த குறுந்தகவலை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செளந்தர்யாவை தொடர்பு கொண்டு தாங்கள் அனுப்பிய குறுந்தகவலைத் திறந்து கிளிக் செய்யும்படி கூறியுள்ளார். அதன் படி செளந்தர்யாவும் குறுந்தகவலை கிளிக் செய்ததாகத் தெரிகிறது.

அவர் கிளிக் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கியிலிருந்து ரூ.87 ஆயிரம் பணம் காணாமல் போனது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யா தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக சுரேஷ் அவரது வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைக் கூறியுள்ளார். ஆனால் அவரோ இதே போல பலர் மோசடி நபர்களிடம் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர் என்றும் இது தொடர்பாக தங்களால் ஏதும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சுரேஷ் உடனடியாக குமாரபாளையம் காவல் துறையில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் இது தொடர்பான புகார்களை சைபர் குற்ற காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதையடுத்து அவர்கள் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.