தமிழ்நட்டிலுள்ள தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளுடன் நடமாடிய இஸ்மாயில் என்பவரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் கள்ள நோட்டுகளையும், அந்த கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டெர் வேல்பாண்டி தலைமையில் ஏட்டு வேல்முருகன், தனிப்பிரிவு மருதுபாண்டி, செய்யது அலி ஆகியோர் கடையநல்லூர் அட்டக்குளம் பகுதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த ஒருவ்வரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த நபர் தென்காசி கல்நாடியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகூர் மீரான் என்பவரது மகன் முகம்மது இஸ்மாயில் (வயது 35) என்பது தெரியவந்தது.
இஸ்மாயில் தனது கையில் வைத்திருந்த ஒரு பையை வாங்கி சோதித்த போது, அதில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விசாரித்த போது, அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து முகமது இஸ்மாயிலைக் கைது செய்த போலீசார் அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று கள்ளநோட்டு அச்சடிக்கப் பயன்படுத்திய இயந்திரம் மற்றும் காகிதங்களைக் கைப்பற்றினர். அதனைத்தொடர்ந்து, சொக்கம்பட்டி காவல் அதிகாரிகள் அவரிடம் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்தும், இதுவரை எவ்வளவு ரூபாய் நோட்டுகள் அச்சடித்துள்ளார், அந்த கள்ளநோட்டுக்களை எப்படி எங்கு மாற்றினார், எந்தப் பகுதியில் மாற்றினார், இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
பாகிஸ்தானில் இருந்து தான் கள்ள நோட்டுகள் பெரும்பாலும் அச்சடித்து இங்கே கொண்டு வரப் படும் என்று பரவலாக கூறப் படும் இந்த நிலையில், வீட்டிலேயே குடிசைத் தொழில் போல் இலட்சக் கணக்கில் கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்க நடமாடிய சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது