ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரேஷன் பொருள் வாங்க சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வர். இதையடுத்து அவர்களுக்கு தேவையான பொருள்கள் வழங்கப்படும்.
பொருள்கள் வாங்கியவுடன், நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ் எம் எஸ் வரும். இந்த நடைமுறையில், ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் அல்லது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் வேலை செய்கிறவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என யார் வந்து கார்டை காட்டினாலும் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க முடியும். இதுபோன்ற நடைமுறைகளால் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை இருந்தது.
இதனால், பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசும், அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பயோமெட்ரிக் (கைரேகை) இயந்திரம் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் மாற்றப்பட உள்ளது.
திருச்சி கிழக்கு பகுதியில் 121 கடைகள், திருச்சி மேற்கு பகுதியில் 92 கடைகள், மண்ணச்சநல்லூர் பகுதியில் 94 கடைகளில் பயோமெட்ரிக் கருவி மாற்றப்பட உள்ளது. இதனால் பழைய இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது. குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து பொருட்களை பெற்று செல்ல முடியும். உண்மையான பயனாளர்களுக்கு இனி பொருட்கள் போய் சேரும். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வராதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.