இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றிற்கு ஆறு இளம் பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களில் மேகா ஜாவ்ரே மற்றும் வந்தனா திரிபாதி ஆகிய இரு இளம் பெண்கள் ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டு ஆற்றின் மையத்திற்குச்சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று கண நேரத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களை சுற்றி ஆற்று நீரின் மட்டம் உயர்ந்தது.
அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாமல் பாறை மேல் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக்கொண்டு உயிர் பயத்தில் கத்தினார்கள். அவர்களுடன் வந்த மற்ற இளம் பெண்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த காவலர்கள் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி அவர்களை மீட்டனர். இந்தக்காட்சிகள் காணொளியாக இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.