
இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ரிலையன்ஸ் ஜியோ உடன் கூகுள் கூட்டணி அமைத்து இறங்கிவருகிறது. கடந்த வாரம் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யபட்டுள்ளதாக அறிவித்தது.
இந்த முதலீட்டை ரிலையன்ஸ், இந்திய சந்தைகளுக்கேற்ற வகையில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு பயன்படுத்த உள்ளது. இதன்மூலமாக இதுவரை ஸ்மார்ட்போனே பயன்படுத்தாத 50 கோடி மக்களை, குறிப்பாக கிராமப்புறத்தில் வாழும் இந்தியர்களை இலக்காக கொண்டுள்ளது.

ஜூன் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில் பதிவான ஸ்மார்ட்போன் விற்பனைகளில் 75 சதவீதத்திற்கும் மேலானவை சீன தயாரிப்புகளே ஆகும். 3-வது இடம்பிடித்துள்ள தென்கொரியாவின் சாம்சங் விற்பனை 17 சதவீதத்திற்கு கீழாக உள்ளது. ஜியோ – கூகுள் கூட்டணிகளில் உருவாகும் மலிவு விலை ஸ்மார்ட்போன் , சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மோசமான செய்தியாக அமைந்துள்ளது. இந்தியாவின் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பிரசாரங்கள் இந்தியாவில் வலுத்து வந்தன. இந்தியாவின் இறையாண்மைக்கும், பொதுமக்களின் தகவல் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்த டிக்டாக் உள்ளிபட 59 சீன ஆப்புகளுக்கு இந்தியாவின் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 45 கோடி மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 50 கோடி பேரிடம் ஸ்மார்ட்போன்களே இல்லை. ஜியோ – கூகுள் கூட்டணி, இவர்களுக்கு மலிவான விலையில் ஸ்மார்ட்போனை அளிக்க திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் தகவல் புரட்சியின் நன்மைகளை அவர்கள் இழக்கக்கூடாது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளர். கூகுள் உடன் கூட்டணி அமைப்பதற்கான குறிக்கோள், தற்போதைய செலவிற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது என கூறிபிட்டிருந்தார்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்களை குறிவைத்து ஜியோ களமிறங்குகிறது. தற்போது 2 ஜி-யை பயன்படுத்தி வருகின்ற மொபைல் போன்களுக்கு பதிலாக 4 ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை அளிப்பது இரண்டு நிறுவனங்களுக்கும் வெற்றியை தரும். ரிலையன்ஸ் ஜியோ இணையச்சேவை திட்டங்களை அளிக்கும்.

கூகுள் தனது தேடுபொறி, யூடியூப், மேப் மற்றும் இதர சேவைகளை அளிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்திய சந்தைகளில், சீன ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. முதல் 5 நிறுவனங்களில் சாம்ஸங் தவிர மற்ற 4 நிறுவனங்களும் சீன நிறுவனங்களே ஆகும். இந்தியாவில் ஏற்கனவே 4 ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மலிவு விலையில் சேவையளித்து வரும் ஜியோ பொருட்களை, 20 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்ற, இரு நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 50 டாலருக்கு குறைவான விலைகளை கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க வாய்ப்பிருக்கிறது என சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இது மிகவும் கடினமான ஒன்று ஏனெனில், இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை தற்போதைக்கு 70 முதல் 100 டாலர் வரை உள்ளது. இந்த பிரிவில் ஜியோமி நிறுவனம் 40 சதவீதமும், சாம்ஸங் 17 சதவீதமும், ரியல்மீ 11 சதவீதமாக இந்திய சந்தையை பிடித்துள்ளன. மெமரி சிப், டிஸ்பிளே உள்ளிட்டவை 50 டாலருக்கு மேல் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்த கூடும்.

இருந்த போதும் 50 அமெரிக்க டாலர்கள் என்பது பெரும்பாலான கிராமப்புற இந்தியர்கள் வாங்க கூடிய விலையாக கூறப்பட்டுள்ளது. அவர்களை கவர முடிந்தால், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய ஆப்பாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியாக இருக்குமெனவும், ஸ்மார்ட்போன் விலையும் மலிவாக இருக்ககூடும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.