பதின்மூன்றாவது(13) பிரிமியர் கிரிக்கெட் தொடரை செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமீரேட்சில் (UAE) நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி அன்று நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. உல்கத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய் காரணமாக அது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ‛T20′ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதால், பிரிமியர் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், பிரிமியர் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று யு.ஏ.இ.,யில் துவங்கும் என ஐ.பி.எல்., தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். இதன் இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த தொடரில் மக்கள் கூட்டத்தை அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி யு.ஏ.இ., அரசின் உத்தரவுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். எனினும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். இதில் இறுதி முடிவு அந்த நாட்டு அரசின் கையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து யு.ஏ.இ கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.