அமெரிக்க பல்கலைகழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க புதிதாக வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அங்கு வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை கற்க பெரும்பாலான மாணவர்கள் அமெரிக்காவை தேர்வு செய்கிறார்கள். இந்தியா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை சார்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பதில் முன்னிலை வகிக்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் பயமுறுத்தல் காரணமாக, தற்போது அங்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் உடனடியாக அமெரிக்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்காவின் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது. இது வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல், பல்கலைகழகங்களையும் பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடனே பல்கலைகழகங்கள் சார்பாக இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், அந்த முடிவு திரும்ப பெற்று கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு குடியேற்றத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ஆன்லைன் மூலம் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இனிமேல் விசா வழங்கப்படாது. மார்ச் மாதம் 9 ஆம் தேதிக்கு பின்னர் பல்கலைகழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால், அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு அந்த உத்தரவில் அமெரிக்க அரசு தெரியப்படுத்தியுள்ளது.