இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசிகளில் 50 சதமானம் இந்திய அரசுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தடுப்பூசி சோதனைகள் சிறப்பாக நடந்து சோதனை முடிவுகள் கொரோனா வைரஸ்ஸை அழிக்கும் தன்மையுடையதாக இருந்தால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தங்கள் சீரம் நிறுவனம் தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு அந்த நோய்த்தடுப்பு மருந்தை வாங்குவதால், இந்திய அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய நாட்டு மக்களுக்கு அம்மருந்து இலவசமாகவே கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பில் முன்னனியில் உள்ள இந்தியாவின் சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியின் 3 ஆம் கட்ட நோய் தடுப்பு பரிசோதனைகளை, இந்தியாவில் நடத்த இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.