தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் கொரோனா பெரும் தாண்டவமாடி வருகிறது. 5 நாட்களில் 500-க்கும் அதிகமான பிணங்கள் வீதிகளிலும், வீடுகளிலும் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை கடந்தது. நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.15 லட்சத்தை தாண்டியுள்ளது.
மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 39 லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 21 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும், நமது இந்திய நாட்டில் 11 லட்சத்து 65 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ரஷ்ய நாட்டில் 7 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 86 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரிசோதனையை அதி வேகப்படுத்தியுள்ள நாடுகளில், அதிகம் பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும் சிகிச்சை முறைகள் காரணமாக பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடைய ஒரு வாய்ப்பு உள்ளது.
ஆனால், தற்சமயம் வரை பல நாடுகளில் குறைவான அளவிலான வைரஸ் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் சமூகப்பரவலாக மாறியுள்ளது, வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை போய்ச் சேராததால் அவர்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் முக்கிய நகரங்களில் சென்ற 5 நாட்களில், வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்து சுமார் 500-க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது. எனினும், பிரேத பரிசோதனைகள் முடியும் வரை அவை சந்தேக மரணம் என்றே அரசு அறிவிக்க உள்ளதாக தெரியப்படுத்த உள்ளது.