
தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னர் பட்டாவை பெயர் மாற்றுவதற்கு வீடு அல்லது மனை வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் மாவட்ட தாசில்தார் பட்டா வழங்குவார். இதுவே தமிழ்நாட்டில் இப்போது உள்ள நடைமுறை ஆகும்.

இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களையும் அல்லல்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இவற்றை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டாவும் மாறுதலாகும், புதிய நடைமுறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் சென்ற 17ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டமும் நடைமுறைக்கு வருகிறது.

இதனை குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சார்பதிவாளர்கள் , சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் பெயர் மீது வேறு ஏதேனும் சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்கள்.

அதன் பிறகு சொத்துக்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்வதன் மூலம் தானாக வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, பட்டா, ஒரு சொத்துக்கு பட்டா மாற்ற யாருடைய ஒப்புதலும் இனி தேவையில்லை.