
சென்னை வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், துபாயில் பொறியளராக வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதே ஹோட்டலில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராஜன் தெருவைச்சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வயது 23 என்பவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது விக்னேஷ், உதயகுமார் இடையே நட்பு ஏற்பட்டது. அப்போது உதயகுமாரிடம், விக்னேஷ் தான் பெரிய தொழிலதிபர். வாட்டர் வியாபாரம் மற்றும் வாட்டர் சுத்திகரிப்பு உபகரண உதிரிபாகங்கள் விற்பனை செய்து பல கோடி இன்கம் வருவதாக கூறினார்.
தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தபிறகும் விக்னேஷ் அடிக்கடி வேளச்சேரியில் உள்ள உதயகுமார் வீட்டுக்கு வந்து பழகியதாகவும், அப்போது தன்னுடைய பிஸினஸில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதை நம்பிய உதயகுமார், ரூபாய் பன்னிரண்டு லட்சம் வரை விக்னேசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு மாதங்களாக லாபத்தில் பங்கு தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் விக்னேஷ் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் விக்னேசின் செல்போனும் ஆஃப் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த உதயகுமார், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விக்னேஷை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து இருந்த விக்னேஷை வேளச்சேரி தனிப்படை காவலர்கள் கைது செய்து விசாரித்தனர்.
அதில், பத்தாம் வகுப்பை இடையில் நிறுத்தி விட்ட விக்னேஷ், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை கொண்டவர். இதனால் சில கால் சென்டர் கம்பனிகளில் வேலை பார்த்து உள்ளார். டிக்-டாக்கில் நடித்து தகவல் போடும்போது அதில் வரும் பல பெண்களுடன் பழகி உள்ளார். அந்த பெண்களின் கணவன்மார்கள், வெளிநாட்டில் வேலை செய்வது தெரிந்தால் அவர்களுடன் சகோதரன் முறையில் பேசி பழகி, அவர்களிடம் உடல் நலம் இன்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், குணமடைந்து வீடு திரும்பிய உடன் பணம் தருவதாக கூறி பணம் வாங்கியும் அவர்களை ஏமாற்றி உள்ளார்.
சில பெண்களிடம் லவ் பன்ணுவதாக கூறி அவர்களிடம் பழகி பணம் பறித்து உள்ளார். பதினைந்துக்கும் அதிகமான பெண்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு ஏமாற்றி பெற்ற பணத்தில் பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பெண்கள் வீட்டுக்கு விமானங்களில் சென்று அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பணத்தை செலவழித்து இருப்பதும் காவலர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கவர்சியான உடையுடன், கையில் நான்கு விரல்களில் கோல்டு போல் தோற்றமளிக்கும் கவரிங் மோதிரங்களை அணிந்தும், நுனி நாக்கில் ஆங்கில பேச்சையும் வைத்து பல பெண்களை மயக்கி ஏமாற்றி உள்ளார்.
கைதான விக்னேஷிடம் இருந்து ரூபாய் மூன்று லட்சத்தை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.