திருவனந்தபுரம் விமான நிலையத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், ரூபாய் 15 கோடி மதிப்புள்ள, சுமார் 30 கிலோ தங்கம் சிக்கியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்டில் அமைந்துள்ள இந்திய துாதரக அலுவலகத்தில், மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சரித், நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோர், இந்த தங்க கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சரித் உடனடியாக கைது செய்யப்பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார். இந்நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, கேரளாவின், கொச்சிக்கு அழைத்து வந்தனர்.
கேரள மாநில தகவல் தொழில்நுட்ப துறையில், ஸ்வப்னா, பணிக்கு சேர்ந்தது எப்படி என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தின் வாயிலாக, அவர், பணிக்கு சேர்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்வப்னா அளித்த கல்வி சான்றிதழில், மஹாராஷ்டிராவில் அமைந்துள்ள ஒரு பல்கலையில், பி.காம்., படித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பல்கலை வழங்கியதாக கூறி, ஒரு கல்வி சான்றிதழையும் அவர் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த சான்றிதழில் உள்ள கையெழுத்து, அச்சு, ஆகியவை போலியானவை என்றும்,. ஸ்வப்னா, எங்கள் பல்கலையில் படிக்கவில்லை எனவும், அந்த பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்த ஆலோசனை நிறுவனத்திடம் நடத்திய விசாரணையில், ஸ்வப்னா, அந்த பல்கலையில் படித்தாரா என்பதை உறுதி செய்யும் பணியை, வேறு ஒரு ஏஜென்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அந்த ஏஜென்சி அளித்த தகவலின் அடிப்படையில் தான், ஸ்வப்னாவை வேலைக்கு பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளது.