பத்மநாப சுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் சொத்துகள் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பாக, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
இன்று பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பில், கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். குழுவில் இடம்பெறும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்து அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த கோயிலின் சீக்ரெட் அறைகளில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி நகைகளும், மற்றும் பண்ட பாத்திர பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இந்த திருக்கோயில் உலக அளவில் கவனம் பெற்றது.
பத்மநாபசுவாமி திருக்கோயிலின் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்து நிர்வகிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் சென்ற 2011 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. சென்ற ஏப்ரல் மாதத்துடன் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று இன்று சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.